ஜோதிட சிந்தனை · பாவ தத்துவம்

சதுரஸ்ய பாவங்கள்
4 மற்றும் 8ம் பாவங்களின் தத்துவம்

மனமும் உடலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் — கால புருஷ ராசி இந்த உண்மையை எவ்வாறு நமக்கு உணர்த்துகிறது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.


மூல ஸ்லோகம்

துர்யஷ்டமௌ சதுரஸௌ

துர்யாஷ்டமௌள சதுரஸ்ரௌள

"4, 8ம் பாவங்கள் இணக்கமானவை" என்பதே இந்த ஸ்லோகத்தின் சுருக்கமான பொருள். "சதுரஸ்ய" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இணக்கம், நான்கு பக்கம், முறை படுத்தப்பட்ட, சதுரம், செவ்வகம் போன்ற பொருள்கள் உண்டு. ஏன் இந்த இரண்டு பாவங்கள் மட்டும் தனியே வகைப்படுத்தப்பட்டன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

பாவங்களின் வகைப்பாடு

ஜோதிடத்தில் பன்னிரண்டு பாவங்களும் பல்வேறு வகைகளில் பிரிக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட குணத்தை உணர்த்துகின்றன:

பாவ வகைப்பாடு — ஒரு பார்வை
வகை பாவங்கள்
கேந்திரம்1, 4, 7, 10
பணபரம்2, 5, 8, 11
ஆபோக்லீமம்3, 6, 9, 12
திரிகோணம்1, 5, 9
உபஜெயம்3, 6, 10, 11
திரிகா6, 8, 12
சதுரஸ்ய ★4, 8 — இணக்கமான பாவங்கள்
★ இக்கட்டுரையில் விவரிக்கப்படும் வகை

ஏன் 4, 8 இணக்கமானவை? — ஒரு சிந்தனை

இந்த கேள்விக்கு விடை தேடும்போது கால புருஷ ராசியின் ஆழமான தர்க்கம் புலப்படுகிறது. அதை நான்கு கோணங்களில் பார்க்கலாம்:

கால புருஷ ராசிக்கு 4ம் வீடு கடகம் — இதன் அதிபதி சந்திரன். 8ம் வீடு விருச்சிகம் — இதன் அதிபதி செவ்வாய். இந்த இரண்டு ராசிகளின் அதிபதிகளே இந்த தத்துவத்தின் மையம்.

சந்திரன் மனதின் சலனத்தை குறிக்கும் கிரகம். செவ்வாய் உடலின் வலிமையை குறிக்கும் கிரகம். ஆக 4ம் பாவம் மனதையும், 8ம் பாவம் உடலையும் குறிப்பிடுகின்றன என்ற ஆழமான தொடர்பு இங்கே உணர்த்தப்படுகிறது.

சந்திரன் கால புருஷ ராசியில் 8ம் வீட்டில் நீச்சம் அடைகிறது; செவ்வாய் கால புருஷ ராசியில் 4ம் வீட்டில் நீச்சம் அடைகிறது. அதாவது, மனதை குறிக்கும் கிரகம் உடலின் கிரகத்தின் வீட்டில் தளர்கிறது; உடலை குறிக்கும் கிரகம் மனதின் கிரகத்தின் வீட்டில் தளர்கிறது — இது ஒரு அழகான இரண்டு திசை உறவை காட்டுகிறது. மேலும் இந்த இரண்டு கிரகங்களும் தங்களுக்குள் நட்பான கிரகங்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

கால புருஷ ராசிக்கு லக்ன ஆதிபத்தியம் பெற்ற செவ்வாய், தன்னுடைய விசேஷ பார்வையால் 4ம் மற்றும் 8ம் பாவத்தினை ஒரே நேரத்தில் பார்க்கிறது. இந்த தொடர்பு சதுரஸ்ய வகைப்பாட்டிற்கு மேலும் வலுசேர்க்கிறது.

"மனதை, உடலை குறிக்கும் கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பானவை; ஒன்றுக்கொன்று வீட்டில் நீச்சமானவை — இதுவே சதுரஸ்ய இணக்கத்தின் ஆணி வேர்."

✦ ✦ ✦

எந்த ஜாதகத்திலும் மனதை, உடலை குறிக்கக்கூடிய பாவங்கள் பலவீனம் பெறக்கூடாது என்ற கருத்தை கால புருஷ தத்துவத்தில் இருந்து இந்த 4, 8ம் பாவ சேர்க்கையை நமக்கு ஜோதிஷ வித்யார்திகள் உணர்த்துகின்றனர்.

மனமும் உடலும் இணைந்தே செயல்படுகின்றன என்ற ஆழமான தத்துவப் பொருளையும் இந்த சதுரஸ்ய வகைப்பாடு நமக்கு தெளிவுபடுத்துகிறது. மேலும், சதுரஸ்ய (4, 8) பாவங்கள் மோட்ச திரிகோணம் என்று அழைக்கப்படும் 4, 8, 12 பாவங்களுக்குள் அமைகின்றன என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: கால புருஷ ராசி என்பது மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகள் முறையே 1 முதல் 12ம் பாவங்களாக அமைந்த ஒரு தத்துவார்த்த ஜாதகம். இதன் மூலம் பாவங்களின் இயல்புகளை ஆராய்வது ஜோதிட ஆய்வின் முக்கியமான அடிப்படை.